search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் அரசியல்"

    ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதற்கு மயங்காதீர் - கமல்ஹாசன்
    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்  எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.



    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.

    தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.  அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும்.  இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர். மேலும் நாளை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் மீது நடந்த செருப்பு வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.  இதனைத்தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிகழ்வை தொடர்ந்து ம.நீ.ம. குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் அதைக்கண்டு மயங்கி விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.  அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும் எனவும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் முட்டை மற்றும் கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கரூர்:

    தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டது.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.

    அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.



    இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.

    பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒலிபெருக்கி மூலம், “உங்கள் கோபம் நியாயமானது. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். நாங்களும், நீங்களும் ஒரே அணியில்தான் இருக்கிறோம். எனவே எங்கள் பணியை செய்ய விடுங்கள். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

    இதை ஏற்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், “நாளை (அதாவது இன்று) சூலூர் செல்வதாக இருந்தது. பிரசாரத்திற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சட்டம்-ஒழுங்கு மீறப்படும் என்பது. நாங்கள் சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் அல்ல என்பதற்கு எங்கள் கூட்டமே உதாரணம்” என்றார்.
    கன்னியாகுமரியில் வருகிற 16-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், 12 இடங்களில் பேச திட்டமிட்டுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீனவர்கள், விவசாயிகளை சந்திக்கிறார். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுகிறார். இதற்காக நாளை (15-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் கமல்ஹாசன் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கமல்ஹாசன் கன்னியாகுமரி வருகிறார். இரவு அங்குள்ள ஓட்டலில் அவர் தங்குகிறார்.

    மறுநாள் 16-ந்தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரி ரவுண்டானாவில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பிறகு அங்கிருந்து கீழமணக்குடி சென்று மீனவ மக்கள் மத்தியில் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

    அதன் பிறகு குளச்சல் பஜார், திங்கள்சந்தை, கருங்கல் போன்ற இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசும் கமல்ஹாசன் புதுக்கடை வழியாக சின்னத்துறை சென்று பேசுகிறார்.

    அங்கிருந்து புறப்படும் கமல்ஹாசன் களியக்காவிளை, அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் பேசிவிட்டு ஆசாரிபள்ளம் வழியாக ராஜாக்கமங்கலம் வந்தடைகிறார். அங்கு வேனில் இருந்தபடி பொதுமக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து நாகர்கோவில் செட்டிகுளம் வழியாக மாலை 6 மணிக்கு வடசேரி வருகிறார். கமல்ஹாசன் வருகையையொட்டி வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மேடை அமைக்கப்படுகிறது. அந்த மேடையில் இருந்தபடி அவர் பொதுமக்களிடம் பேசுகிறார். நாகர்கோவில் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு கார் மூலம் இரவு கன்னியாகுமரி செல்லும் கமல்ஹாசன் அங்கு தங்குகிறார்.

    மறுநாள் 17-ந்தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்படும் கமல்ஹாசன் கூடங்குளம் வழியாக தூத்துக்குடி சென்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 18-ந்தேதி நெல்லை, விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    கமல்ஹாசன் குமரி மாவட்டம் வருகையையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.  #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ×